11. செய்ந்நன்றியறிதல் |
101. | செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் |
| வானகமும் ஆற்றல் அரிது. |
|
"வாராது வந்த மாமணி" என்பதுபோல், "செய்யாமற் செய்த உதவி" என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா. |
102. | காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் |
| ஞாலத்தின் மாணப் பெரிது. |
|
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும். |
103. | பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் |
| நன்மை கடலின் பெரிது. |
|
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது. |
104. | தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் |
| கொள்வர் பயன்தெரி வார். |
|
ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார். |
105. | உதவி வரைத்தன் றுதவி உதவி |
| செயப்பட்டார் சால்பின் வரைத்து. |
|
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொறுத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொறுத்தே அதன் அளவு மதிப்பிடப்படும். |