106. | மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க |
| துன்பத்துள் துப்பாயார் நட்பு. |
|
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது. |
107. | எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் |
| விழுமந் துடைத்தவர் நட்பு. |
|
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்லுவதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது. |
108. | நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது |
| அன்றே மறப்பது நன்று. |
|
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது. |
109. | கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த |
| ஒன்றுநன் றுள்ளக் கெடும். |
|
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது. |
110. | எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை |
| செய்ந்நன்றி கொன்ற மகற்கு. |
|
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை. |