பக்கம் எண் :

இல்லறவியல்24கலைஞர் உரை

116.

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.

 

நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு
வந்துவிடுமானால்  அவன்  கெட்டொழியப்  போகிறான் என்று அவனுக்கே
தெரிய வேண்டும்.
 

117.

கெடுவாக வையா துலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

 

நடுவுநிலைமை   தவறாமல்  அறவழியில்  வாழ்கிற  ஒருவருக்கு அதன்
காரணமாகக் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை
உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.
 

118.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க் கணி.

 

ஒரு  பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து
நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.
 

119.

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.

 

நேர்மையும்  நெஞ்சுறுதியும்  ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில்
நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.
 

120.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.

 

பிறர்  பொருளாக  இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே
கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.