பக்கம் எண் :

திருக்குறள்25அறம்

13. அடக்கம் உடைமை
 

121.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

 

அடக்கம்  அழியாத  புகழைக்  கொடுக்கும். அடங்காமை  வாழ்வையே
இருளாக்கி விடும்.
 

122.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

 

மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும்.அடக்கத்தைவிட
ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.
 

123.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்

தாற்றின் அடங்கப் பெறின்.

 

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன்
நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.
 

124.

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.

 

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க  உணர்வும்
கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.
 

125.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.

 

பணிவு  என்னும்  பண்பு, எல்லார்க்கும்  நலம்  பயக்கும்.  ஏற்கனவே
செல்வர்களாக     இருப்பவர்களுக்கு     அந்தப்  பண்பு,  மேலும்  ஒரு
செல்வமாகும்.