பக்கம் எண் :

5

தெளிந்த சிந்தையன், தேர்ந்த புலமையன்,

நுண்மாண் நுழைபுலம் வாய்த்த மதியினன்,

ஆழ்ந்த கருத்தினன், அசைவிலா உறுதியன்,

வெல்லுஞ் சொல்வலான், சோர்வு மிலான்,

கொண்ட கொள்கையே கோட்பாடாய் ஏற்றவன்,

எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணியன்,

பகுத்தறிவுத் திறலோன், பண்பினை மறவோன்

பொங்குநடையினில் 'சங்கத்தமிழ்ச்' சாறளித்தோன்

பளிங்குப் பாவையெனக் 'குறளோவியம்' படைத்தோன்

தெளிதமிழின் நடைபலவும் வல்லவனாம் கலைஞர்

"வீழ்வது நாமாக இருப்பினும்,

வாழ்வது தமிழாகட்டும்" எனத்துணிந்து

'தமிழே தனது உயிர்மூச் செனவும்

தமிழர் வாழ்வே தன்வாழ்வென வுங்கொண்டு

இனநலம் மொழிநலம் காக்கும் தொண்டே

தன்பிறவிக் கடனென்று ஏற்ற செம்மல்!
 

தன்மானத் தந்தை பெரியாரின்

உணர்வு காக்கும் மைந்தன்!

இனமான ஏந்தல் அண்ணாவின்

இதயம் நாடிய இளவல்!

இனமாந்தர்தம் இழிவு துடைத்திட

முனைவோருக்கோ தோழன்!

இலட்சியப் பணியினில் கலைஞர்

என்பெருமைக்குற்ற நண்பர்!