பக்கம் எண் :

இல்லறவியல்28கலைஞர் உரை

136.

ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக் கறிந்து.

 

மன  உறுதி  கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை
உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.
 

137.

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவ ரெய்தாப் பழி.

 

நல்ல  நடத்தையினால்  உயர்வு  ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி
வந்து சேரும்.
 

138.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.

 

நல்லொழுக்கம்,   வாழ்க்கையில்   நன்மைக்கு   வித்தாக   அமையும்.
தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
 

139.

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.

 

தவறியும்கூடத்  தம்  வாயால்  தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம்
உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.
 

140.

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்

கல்லா ரறிவிலா தார்.

 

உயர்ந்தோர்  ஏற்றுக்  கொண்ட   ஒழுக்கம்  எனும் பண்போடு வாழக்
கற்காதவர்கள் பல நூல்களைப்  படித்திருந்தும்கூட   அறிவில்லாதவர்களே
ஆவார்கள்.