15. பிறனில் விழையாமை |
141. | பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் |
| தறம்பொருள் கண்டார்க ணில். |
|
பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை. |
142. | அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை |
| நின்றாரிற் பேதையா ரில். |
|
பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள். |
143. | விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் |
| தீமை புரிந்தொழுகு வார். |
|
நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான். |
144. | எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும் |
| தேரான் பிறனில் புகல். |
|
பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும். |
145. | எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும் |
| விளியாது நிற்கும் பழி. |
|
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான். |