பக்கம் எண் :

திருக்குறள்33அறம்

17. அழுக்காறாமை
 

161.

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்

தழுக்கா றிலாத இயல்பு.

 

மனத்தில்   பொறாமையில்லாமல்   வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய
நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.
 

162.

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்.

 

யாரிடமும்   பொறாமை    கொள்ளாத   பண்பு ஒருவர்க்கு வாய்க்கப்
பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.
 

163.

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணா தழுக்கறுப் பான்.

 

அறநெறியையும், ஆக்கத்தையும்  விரும்பிப்  போற்றாதவன்தான்,  பிறர்
பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.
 

164.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக் கறிந்து.

 

தீய   வழியில்   சென்றால்  துன்பம்  ஏற்படுமென்பதை அறிந்தவர்கள்
பொறைமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
 

165.

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்

வழுக்கியுங் கேடீன் பது.

 

பொறாமைக் குணம்  கொண்டவர்களுக்கு  அவர்களை  வீழ்த்த  வேறு
பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.