18. வெஃகாமை |
171. | நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் |
| குற்றமும் ஆங்கே தரும். |
|
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும். |
172. | படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் |
| நடுவன்மை நாணு பவர். |
|
நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காகப் பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார். |
173. | சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே |
| மற்றின்பம் வேண்டு பவர். |
|
அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார். |
174. | இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற |
| புன்மையில் காட்சி யவர். |
|
புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்பமாட்டார். |
175. | அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் |
| வெஃகி வெறிய செயின். |
|
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்? |