19. புறங்கூறாமை |
181. | அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் |
| புறங்கூறா னென்றல் இனிது. |
|
அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது. |
182. | அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே |
| புறனழீஇப் பொய்த்து நகை. |
|
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது. |
183. | புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் |
| அறங்கூறும் ஆக்கந் தரும். |
|
கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதை விடச் சாவது நன்று. |
184. | கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க |
| முன்னின்று பின்னோக்காச் சொல். |
|
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு. |
185. | அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் |
| புன்மையாற் காணப் படும். |
|
ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக் கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். |