186. | பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் |
| திறன்தெரிந்து கூறப் படும். |
|
பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும். |
187. | பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி |
| நட்பாடல் தேற்றா தவர். |
|
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள். |
188. | துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினார் |
| என்னைகொல் ஏதிலார் மாட்டு. |
|
நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்? |
189. | அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் |
| புன்சொ லுரைப்பான் பொறை. |
|
ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை ‘இவனைச் சுமப்பதும் அறமே’ என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது. |
190. | ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் |
| தீதுண்டோ மன்னு முயிர்க்கு. |
|
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும். |