20. பயனில சொல்லாமை |
191. | பல்லார் முனியப் பயனில சொல்லுவான் |
| எல்லாரும் எள்ளப் படும். |
|
பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள். |
192. | பயனில பல்லார்முன் சொல்லல் நயனில |
| நட்டார்கட் செய்தலிற் றீது. |
|
பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும். |
193. | நயனில னென்பது சொல்லும் பயனில |
| பாரித் துரைக்கும் உரை. |
|
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும். |
194. | நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் |
| பண்பில்சொல் பல்லா ரகத்து. |
|
பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும். |
195. | சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில |
| நீர்மை யுடையார் சொலின். |
|
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும். |