196. | பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் |
| மக்கட் பதடி யெனல். |
|
பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும். |
197. | நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் |
| பயனில சொல்லாமை நன்று. |
|
பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது. |
198. | அரும்பய னாயும் அறிவினார் சொல்லார் |
| பெரும்பய னில்லாத சொல். |
|
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார். |
199. | பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த |
| மாசறு காட்சி யவர். |
|
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார். |
200. | சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க |
| சொல்லிற் பயனிலாச் சொல். |
|
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும். |