பக்கம் எண் :

திருக்குறள்41அறம்

21. தீவினையச்சம்
 

201.

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை யென்னுஞ் செருக்கு.

 

தீயவர்கள்  தீவினை  செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி
ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.
 

202.

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

 

தீய  செயல்களால்  தீமையே  விளையும்  என்பதால் அச்செயல்களைத்
தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட  அஞ்சிட
வேண்டும்.
 

203.

அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்குஞ் செய்யா விடல்.

 

தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச்  செய்யாமலிருத்தலை,  எல்லா
அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.
 

204.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

 

மறந்தும்கூட  மற்றவர்க்குக்  கேடு  செய்ய நினைக்கக் கூடாது; அப்படி
நினைத்தால்  அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு
விடும்.
 

205.

இலனென்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து.

 

வறுமையின்  காரணமாக   ஒருவன்  தீய செயல்களில் ஈடுபடக்கூடாது;
அப்படி    ஈடுபட்டால்    மீண்டும்    அவன்    வறுமையிலேயே வாட
வேண்டியிருக்கும்.