பக்கம் எண் :

இல்லறவியல்42கலைஞர் உரை

206.

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்.

 

வேதனை  விளைவிக்கும்  தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என
எண்ணுகிறவன் அவனும் அத் தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல்  இருக்க
வேண்டும்.
 

207.

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென் றடும்.

 

ஒருவர்  நேரடியான  பகைக்குத்  தப்பி வாழ முடியும்; ஆனால், அவர்
செய்யும்  தீய  வினைகள்    பெரும்  பகையாகி  அவரைத்   தொடர்ந்து
வருத்திக்கொண்டே இருக்கும்.
 

208.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயா தடியுறைந் தற்று.

 

ஒருவருடைய  நிழல்  அவருடனேயே   ஒன்றியிருப்பதைப்போல்,  தீய
செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல்,   தொடர்ந்து
ஒட்டிக் கொண்டிருக்கும்.
 

209.

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்

துன்னற்க தீவினைப் பால்.

 

தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம்  சிறிதளவுகூட
நெருங்கலாகாது.
 

210.

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.

 

வழிதவறிச்   சென்று    பிறர்க்குத்    தீங்கு   விளைவிக்காதவர்க்கு
எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.