22. ஒப்புரவறிதல் |
211. | கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் |
| டென்னாற்றுங் கொல்லோ உலகு. |
|
கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர். |
212. | தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு |
| வேளாண்மை செய்தற் பொருட்டு. |
|
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும். |
213. | புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே |
| ஒப்புரவின் நல்ல பிற. |
|
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய "ஒப்புரவு" என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது. |
214. | ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் |
| செத்தாருள் வைக்கப் படும். |
|
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான். |
215. | ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் |
| பேரறி வாளன் திரு. |
|
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும். |