216. | பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் |
| நயனுடை யான்கண் படின். |
|
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும். |
217. | மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் |
| பெருந்தகை யான்கண் படின். |
|
பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும். |
218. | இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் |
| கடனறி காட்சி யவர். |
|
தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும்,பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர். |
219. | நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர |
| செய்யா தமைகலா வாறு. |
|
பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான். |
220. | ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் |
| விற்றுக்கோள் தக்க துடைத்து. |
|
பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும். |