23.ஈகை |
221. | வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் |
| குறியெதிர்ப்பை நீர துடைத்து. |
|
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும். |
222. | நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் |
| இல்லெனினும் ஈதலே நன்று. |
|
பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும். |
223. | இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் |
| குலனுடையான் கண்ணே யுள. |
|
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும். |
224. | இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் |
| இன்முகங் காணு மளவு. |
|
ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும். |
225. | ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை |
| மாற்றுவா ராற்றலிற் பின். |
|
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப் பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும். |