பக்கம் எண் :

இல்லறவியல்46கலைஞர் உரை

226.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

 

பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண்  போகாது.
அதுவே, தான் தேடிய பொருளைப்  பிற்காலத்தில்   உதவுவதற்கு  ஏற்பச்
சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.
 

227.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்

தீப்பிணி தீண்ட லரிது.

 

பகிர்ந்து  உண்ணும்  பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய
நோய் அணுகுவதில்லை.
 

228.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்.

 

ஏழை எளியோர்க்கு    எதுவும்   அளித்திடாமல்   ஈட்டிய  பொருள்
அனைத்தையும் இழந்திடும்   ஈவு   இரக்கமற்றோர்,   பிறர்க்கு   வழங்கி
மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?
 

229.

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமிய ருணல்.

 

பிறர்க்கு  ஈவதால்   குறையக்  கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத்
தாமே   உண்ணுவது    என்பது  கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும்
கொடுமையானது.
 

230.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈத லியையாக் கடை.

 

சாவு   எனும்   துன்பத்தைவிட  வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத
மனத்துன்பம் பெரியது.