பக்கம் எண் :

திருக்குறள்47அறம்

24.புகழ்
 

231.

ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல

தூதிய மில்லை உயிர்க்கு.

 

கொடைத்  தன்மையும்,   குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம்
தரக் கூடியது வேறெதுவும் இல்லை.
 

232.

உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்

றீவார்மேல் நிற்கும் புகழ்.

 

போற்றுவோர்     போற்றுவனவெல்லாம்     இல்லாதவர்க்கு   ஒன்று
வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.
 

233.

ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்

பொன்றாது நிற்பதொன் றில்.

 

ஒப்பற்றதாகவும்,     அழிவில்லாததாகவும்       இந்த    உலகத்தில்
நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.
 

234.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தே ளுலகு.

 

இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ்
ஈட்டிய      பெருமக்களை  விடுத்து, அறிவாற்றல்  உடையவரை  மட்டும்
போற்றிக் கொண்டிராது.
 

235.

நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.

 

துன்பங்களுக்கிடையேகூட   அவற்றைத்   தாங்கும் வலிமையால் தமது
புகழை   வளர்த்துக்   கொள்வதும், தமது சாவிலும்கூடப்   புகழை  நிலை
நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.