பதிப்புரை | பேராசிரியர் மா.நன்னன், புலவர்; எம்.ஏ., பி.எச்.டி., | கலைஞர் உரையின் பெற்றியினை, 1. தேவை, 2. வழிபாடு, 3. பெண் வழிச்சேறல், 4. ஊழ், 5. பல்வகைச் சிறப்புகள் என்னும் அய்ந்து பகுப்புகளில் சுட்டிக் காட்டுவது இப்பதிப்புரையின் கடமை, எனக் கருதப்படுகிறது. இவற்றுள் வழிபாடு என்பது கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத்துக்குக் கலைஞர் சூட்டிய சரியான பெயராகும். பின்பற்றுதல் என்னும் பொருள்பட வழிபாடு என்பது அதன் பெயராக அமைந்தது. முதற்கண் கலைஞர் உரையின் தேவை குறித்துச் சிறிது கூறப்படுகிறது. | 1. தேவை | "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்றும், 'ஈகை அறம்' என்றும் கூறப்படுவனவற்றுக்குக் காரணம் யாது? உலகில் இல்லாமை இருப்பதுதானே! அது மட்டுமே ஈகைக்குக் காரணமா? அன்று; இருப்பது இல்லாதிருந்தால் அஃதாவது உடைமை இன்மையாயிருப்பின் ஈகை ஏற்பட்டிராதன்றோ? ஆகவே, உலகில் வறுமையும் இருக்கிறது; அதற்கு எதிரான உடைமையும் இருக்கிறது. அதனாற்றான் ஈகையறம் பிறந்தது. | இந் நிலையிலிருந்து நாம் மற்றொன்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அது யாது எனில், தம் தேவைக்கு மேல் சிலரிடம் செல்வம் இருக்கிறது; அதனாற்றான் வேறு சிலரின் தேவைக்கு அது கிடைக்கவில்லை என்பதாகும். மேலும் சற்று விளக்கமாக இதைக் கூறுவதானால் உலகம் வறுமையால் வாடுவதற்குக் காரணம் பொருள் இல்லாமை அன்று; அப்பொருள் அனைவர்க்கும் கிடைக்கும் ஏற்பாடில்லாமையே என்பதாகும். |
|
|