பக்கம் எண் :

இல்லறவியல்48கலைஞர் உரை

236.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

 

எந்தத்   துறையில்  ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்;
இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.
 

237.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவ தெவன்.

 

உண்மையான   புகழுடன்   வாழ  முடியாதவர்கள் அதற்காகத் தம்மை
நொந்து   கொள்ள   வேண்டுமே  தவிரத்  தமது   செயல்களை இகழ்ந்து
பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?
 

238.

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.

 

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய  புகழைப்  பெறாவிட்டால்,  அது
அந்த வாழ்க்கைக்கே வந்த பழி யென்று வையம் கூறும்.
 

239.

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.

 

புகழ்   எனப்படும்  உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால்,
இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.
 

240.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.

 

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும். புகழ்  இல்லாதவர்
வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.