பக்கம் எண் :

திருக்குறள்51அறம்

26. புலால் மறுத்தல்
 

251.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்.

 

தன்  உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக்
கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.
 

252.

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி

ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு.

 

பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர்  என்னும்
சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும்  சிறப்பு
இல்லை.
 

253.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்

உடல்சுவை யுண்டார் மனம்.

 

படைக்   கருவியைப்    பயன்படுத்துவோர்  நெஞ்சமும், ஓர் உயிரின்
உடலைச்  சுவைத்து  உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக்
கூடியவைகள் அல்ல.
 

254.

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்

பொருளல்ல தவ்வூன் தினல்.

 

கொல்லாமை  அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும்.
எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.
 

255.

உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யா தளறு.

 

உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது;புலால்
உண்ணாதவர்கள்    இருப்பதால்,    பல   உயிர்கள்   கொல்லப்படாமல்
வாழ்கின்றன.