பக்கம் எண் :

துறவறவியல்52கலைஞர் உரை

256.

தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

 

புலால்   உண்பதற்காக  உலகினர்   உயிர்களைக் கொல்லா திருப்பின்,
புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.
 

257.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்ண துணர்வார்ப் பெறின்.

 

புலால்  என்பது  வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர்
அதனை உண்ணாமல் இருக்க வேண்டும்.
 

258.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

 

மாசற்ற  மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண
மாட்டார்கள்.
 

259.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று.

 

நெய்   போன்ற   பொருள்களைத்   தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை
நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.
 

260.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும்.

 

புலால்     உண்ணாதவர்களையும்,      அதற்காக      உயிர்களைக்
கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.