27. தவம் |
261. | உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை |
| அற்றே தவத்திற் குரு. |
|
எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் "தவம்" என்று கூறப்படும். |
262. | தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை |
| அஃதிலார் மேற்கொள் வது. |
|
உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும். |
263. | துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன் |
| மற்றை யவர்கள் தவம். |
|
துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது. |
264. | ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும் |
| எண்ணின் தவத்தான் வரும். |
|
மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும். |
265. | வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் |
| ஈண்டு முயலப் படும். |
|
உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப் படுவதாகும். |