பக்கம் எண் :

துறவறவியல்58கலைஞர் உரை

286.

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்

கன்றிய காத லவர்.

 

ஓர்   எல்லைக்குட்பட்டு   வாழ்வைச்   செம்மையாக     அமைத்துக்
கொள்ளாதவர்கள்,    களவு    செய்து  பிறர்   பொருளைக் கொள்வதில்
நாட்டமுடையவராவார்கள்.
 

287.

களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார்க ணில்.

 

அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல்
எனும் சூதுமதி கிடையாது.
 

288.

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்

களவறிந்தார் நெஞ்சில் கரவு.

 

நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர்
நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.
 

289.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்.

 

களவு   என்பதைத்   தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு
கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.
 

290.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தே ளுலகு.

 

களவாடுபவர்க்கு   உயிர்    வாழ்வதேகூடத்  தவறிப்போகும்; களவை
நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.