30. வாய்மை |
291. | வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் |
| தீமை யிலாத சொலல். |
|
பிறருக்கு எள்முளையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும். |
292. | பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த |
| நன்மை பயக்கு மெனின். |
|
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும். |
293. | தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் |
| தன்நெஞ்சே தன்னைச் சுடும். |
|
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும். |
294. | உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் |
| உள்ளத்து ளெல்லாம் உளன். |
|
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள். |
295. | மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு |
| தானஞ்செய் வாரின் தலை. |
|
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள். |