பக்கம் எண் :

துறவறவியல்60கலைஞர் உரை

296.

பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை

எல்லா அறமுந் தரும்.

 

பொய்   இல்லாமல்    வாழ்வது   போன்ற  புகழ் மிக்க வாழ்வு வேறு
எதுவுமில்லை;   என்றும்    நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த
வாழ்வேயாகும்.
 

297.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.

 

செய்யக்கூடாததைச்   செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய்
கூறாத   பண்பு  பொய்த்துப்  போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை
தருவதாகும்.
 

298.

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

 

நீரில்    குளிப்பதால்   உடலின்  அழுக்கு  மட்டுமே  நீங்கும்; மனம்
அழுக்குப்படாமல்   தூய்மையுடன்   விளங்கிட,   சொல்லிலும் செயலிலும்
வாய்மை வேண்டும்.
 

299.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

 

புறத்தின்  இருளைப்  போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப்
போக்கும்  பொய்யாமை  எனும்  விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக்
காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.
 

300.

யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.

 

வாய்மையைப்   போல்   சிறந்த   பண்பு   வேறொன்றுமே  இல்லை
என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.