306. | சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் |
| ஏமப் புணையைச் சுடும். |
|
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சின மென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமன்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும். |
307. | சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு |
| நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. |
|
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும். |
308. | இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் |
| புணரின் வெகுளாமை நன்று. |
|
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும்போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது. |
309. | உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் |
| உள்ளான் வெகுளி யெனின். |
|
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றை யெல்லாம் உடனடியாகப் பெற முடியும். |
310. | இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத் |
| துறந்தார் துறந்தார் துணை. |
|
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார். |