பக்கம் எண் :

திருக்குறள்63அறம்

32. இன்னா செய்யாமை
 

311.

சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

 

மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப்  பெறக்   கூடுமென்றாலும்
அதன் பொருட்டுப் பிறருக்குக் கேடு  செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின்
கொள்கையாகும்.
 

312.

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

 

சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது
அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே
சிறந்த மனிதரின் கொள்கையாகும்.
 

313.

செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும்.

 

யாருக்கும்   கேடு   செய்யாமல்    இருப்பவருக்குப்   பகைவர் கேடு
செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத்  துன்பம்
தரக் கூடியதாகும்.
 

314.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

 

நமக்குத் தீங்கு செய்தவரைத்  தண்டிப்பதற்குச்   சரியான  வழி, அவர்
வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
 

315.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போற் போற்றாக் கடை.

 

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத்  தம்  துன்பம்  போலக்  கருதிக்
காப்பாற்ற   முனையாதவர்களுக்கு   அறிவு  இருந்தும்  அதனால்  எந்தப்
பயனுமில்லை.