பக்கம் எண் :

திருக்குறள்67அறம்

34. நிலையாமை
 

331.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

 

நிலையற்றவைகளை   நிலையானவை  என  நம்புகின்ற அறியாமை மிக
இழிவானதாகும்.
 

332.

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று.

 

சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து
முடிந்ததும்   மக்கள்   அரங்கத்தை   விட்டுக்    கலைந்து  செல்வதைப்
போன்றதாகும்.
 

333.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்.

 

நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக்
கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.
 

334.

நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்

வாள துணர்வார்ப் பெறின்.

 

வாழ்க்கையைப்   பற்றி    உணர்ந்தவர்கள், நாள் என்பது   ஒருவரின்
ஆயுளை    அறுத்துக்   குறைத்துக்   கொண்டேயிருக்கும்  வாள்  என்று
அறிவார்கள்.
 

335.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்.

 

வாழ்க்கையின்    நிலையாமையை    உணர்ந்து  நம்  உயிர் இருக்கும்
போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.