பக்கம் எண் :

திருக்குறள்75அறம்

38. ஊழ்.
 

371.

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்று மடி.

 

ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத  ஊக்கத்தைக்
கொடுக்கும்.  ஊக்கத்தின்   அழிவுக்கான   இயற்கை  நிலை   சோம்பலை
ஏற்படுத்தும்.
 

372.

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

ஆகலூ ழுற்றக் கடை.

 

அழிவுதரும்   இயற்கை   நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம்
தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.
 

373.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை யறிவே மிகும்.

 

கூரிய  அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும்
அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.
 

374.

இருவே றுலகத் தியற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.

 

உலகின்   இயற்கை    நிலை    இரு    வேறுபட்டதாகும்.   ஒருவர்
செல்வமுடையவராகவும்,   ஒருவர்  அறிவுடையவராகவும் இருப்பதே அந்த
வேறுபாடாகும்.
 

375.

நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்

நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.

 

நல்ல  செயல்களை ஆற்ற முற்படும்போது அவை  தீமையில்   போய்
முடிந்துவிடுவதும்,  தீய  செயல்களை  ஆற்றிட  முனையும்போது  அவை
நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.