பக்கம் எண் :

1
 

நாலடியார்

இளவழகனாருரை

கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.

(பொருள்.)வான்இடு வில்லின்-மேகத்தால் உண்டாகின்ற இந்திரவில்லைப்போல, வரவு அறியா வாய்மையால் - பிறப்பின் வருகையை அறிந்துகொள்ளக்கூடாத உண்மையினால், யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி, கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத அருட்கோல இறைவனை, நிலம் சென்னி உற வணங்கி - தரையில் எமது முடி பொருந்தும்படி தொழுது, சேர்தும் - இடைவிடாது உள்ளுவோம்.

(கருத்து.)பிறப்பின் தோற்றம் முதலியவற்றை நாம் முழுதுந் தெரிந்துகொள்ளக் கூடாமையால், விரும்பும் நலங்களின் பொருட்டு இறைவனைத் தொழுது அடைக்கலமாவோம்.