(வி-ம்.)அருளொழுக்கமுடைய சான்றோர் நோய்கொண்டு மறையாமல், செயற்கருஞ் செயல்கள் செய்து தூயராய் மறைதலால்1அவர்கள் மறையும் இடம் புனிதமாகப் போற்றப்படுதலின், ‘சுடுகாடுகள் கீழ்மக்கள் பிணங்களையுடையன' எனப்பட்டது. அக்கீழ்மக்களினும் இழிந்தனவான சிற்றுயிர்களின் பிணங்களையுடையன புல்லறிவாளர் வயிறுகள் என்க. பல காலுந் தின்று உள்ளே செலுத்துதலின் ‘தொக்க' எனவும், நல்லோர் கூறும் அறவுரைகளையேனுங் கேட்டொழுகுதலில்லாமையின் ‘புல்லறிவாளர்' எனவும் உரைக்கப்பட்டன, ஏகாரம், ஈற்றசை. (1) 122. இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க் காளாய்க் கரும்பார் கழனியுட் சேர்வர் - சுரும்பார்க்கும் காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும் கூட்டுளாய்க் கொண்டுவைப் பார். (பொ-ள்.)சுரும்பு ஆர்க்கும் காட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழும் கூட்டுளாய்க் கொண்டு வைப்பார் - வண்டுகள் ஆரவாரிக்கும் இனிய காட்டில் இருந்து உயிர் வாழும் கவுதாரியையும் காடையையும் கூட்டில் இருந்து வருந்தும்படி பிடித்துக்கொண்டு வந்து சிறை வைப்பவர். இரும்பு ஆர்க்கும் காலராய் ஏதிலார்க்கு ஆளாய் கரும்பார் கழனியுள் சேர்வர் - இருப்பு விலங்குகளாற் பூட்டப்பட்ட கால்களையுடையராகவேனும் அயலார்க்கு அடிமைப்பட்டவர்களாகவேனும் கட்டுப்பட்டு வலிய பார்நிலத்திலாதல் விளைநிலத்திலாதல் போய்த் தொழில் செய்து உழல்வர். (க-து.)சிற்றுயிர்களைச் சிறைப்படுத்துந் தீவினைக்கும் அஞ்சுதல் வேண்டும். (வி-ம்.)"பூவைகிளி தோகைபுணர் அன்னமொடு பன்மா, யாவையவை தங்கிளையின் நீங்கி அழவாங்கிக், காவல் செய்து வைத்தவர்கள் தங்கிளையின் நீங்கிப் போவர்புகழ் நம்பி இது பொற்பிலது கண்டாய்"2
1. புறம். 191, 218. 2. சிந். 13 : 277
|