என்றார் பிறரும். காலராய்க் கரும்பார் சேர்வர், ஆளாய்க் கழனியுட் சேர்வர் என நிரனிறையாகக் கொள்க. கரும்பார் சேர்தல் சிறைச்சாலைகளுட் செய்யுந்தொழில். இரும்பு : ஆகுபெயர். சிவலும் குறும்பூழுமென்றது, இலக்கணையாற் பிற சிற்றுயிர்களையும் உணர்த்தும். பின் அடிகளில் வரும் ஆய் இரண்டனுள் முன்னது செய்தெனெச்சமும் பின்னது செயவெனெச்சமுமாகக் கொள்க. (2) 123. அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித் துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால் அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக் கால். (பொ-ள்.)அக்கால் அலவனைக் காதலித்துக் கால் முரித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக்கால் - முற்பிறப்பில் நண்டின் ஊனை விரும்பி அதன் கால்களை ஒடித்துத் தின்ற பழவினை இப்போது வந்தடைந்தால், அக்குபோல் அங்கை ஒழிய விரல் அழுகித் துக்கத் தொழிநோய் எழுப - சங்கு மணிபோல வெண்ணிறமாய் உள்ளங்கைகள் மட்டும் இருக்க ஏனை விரல்களெல்லாம் அழுகிக் குறைந்து துன்பத்திற்கேதுவான தொழுநோய் உண்டாகப் பெறுவர். (க-து.)ஊனுண்ணுந் தீவினைக்கு அஞ்சி அதனைவிடல் வேண்டும். (வி-ம்.)ஏகாரங்கள் அசைநிலை, ‘அங்கை' யென்பது "அகமென் கிளவிக்கு"1என்னும் விதிப்படி ‘அகங்கை' என நின்றது. ‘எழுப' வென்பது ஈண்டு உயர் திணை யீறு. அக்கால் கால் முரித்த விரல் இக்கால் அழுகிக் குறைந்த தென்பது. 124. நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம் எரிப்பச்சுட் டெவவநோய் ஆக்கும் - பரப்பக் கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக் கடுவினைய ராகியார்ச் சார்ந்து. 
 1. தொல். புள்ளி. 20. 
 |