பக்கம் எண் :

109
 

(பொ-ள்.)நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய்போல்வதும் எரிப்பச் சுட்டு எவ்வம் நோய் ஆக்கும் - உடம்புக்கு நன்மை செய்யும் நெய்யும் நெருப்பின் அழற்சியைப் பொருந்தினால், எரிந்து தீயும்படி சுட்டு மிக்க வருத்தந்தரும் நோயை உண்டாக்கும்; கோடாரும் கடுவினைய ராகியார்ச்சார்ந்து கோடிப் பரப்பக் கொடுவினையராகுவர் - நெறிகோணாத நல்லோரும் தீவினையாயினாரைச் சார்ந்து அதனால் நெறிகோணி மிக்க கொடுந்தொழிலுடையராவர்.

(க-து.)தீச்செயலாளரோடு சேர்தற்கு அஞ்சுதல் வேண்டும்.

(வி-ம்.)‘போல்வது' மென்பது ஒப்பில்போலி.1சார்ந்து என்னும் எச்சம் காரணப்பொருட்டு. இயல்பில் நல்லோரும் தீய சேர்க்கையால் திண்ணமாய்த் தீயோராக மாறி விடுவர் என்று அவ்வகையில் ஐயமின்மையை இச்செய்யுள் உணர்த்திற்று.

(4)

125. பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.

(பொ-ள்.)பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும் - சான்றோர் நட்பு பிறைத்திங்களைப் போல ஒவ்வொரு நாளும் முறைமுறையே வளரும்; சிறியார் தொடர்பு வான் ஊர் மதியம்போல் வைகலும் வரிசையால் தானே தேயும் - கீழோர் உறவு வானத்தில் தவழுகின்ற முழுத் திங்களைப்போல ஒவ்வொரு நாளும் முறையாகத் தானே தேய்ந்தொழியும்.

(க-து.)சிற்றினத்தாரோடு சேர்தற்கு அஞ்சுதல் வேண்டும்.


1. தொல். இடை. 30.