பக்கம் எண் :

110
 

(வி-ம்.)முழுத்திங்கட்கு ‘மதி' எனவும், குறைத்திங்கட்குப் ‘பிறை' எனவும் வரும் சொல் வழக்குக் கருத்திருத்துதற்குரியது. தானே என்பதை முன்னும் கூட்டலாம். ‘வரிசை வரிசையா' என்னும் அடுக்கு உவகைப்பொருட்டு. வான் ஊர்தல் பிறைக்கும் உரியதேனுஞ் சிறப்பு நோக்கி மதியத்துக்கு அடைமொழியாக வந்தது. இச் செய்யுளின் உவமமும் பொருளும் "நிறைநீர நீரவர்கேண்மைபிறை மதிப், பின்னீர பேதையார் நட்பு"1என்னுந் திருக்குறளில் உள்ளவாறே உள்ளன.

(5)

126. சான்றோ ரெனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தாய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.

(பொ-ள்.)சான்றோர் என மதித்துச் சார்ந்தாய்மன் - நீ சிலரைக் குணநிறைந்தவர் எனமதித்து மிகுதியும் உறவு கொள்கின்றனை; சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் -அவ்வாறு உறவு கொள்ளும் நினக்கு நீ சார்வோரிடத்தில் குணநிறைவு காணப்படாதாயின், சார்ந்தாய் கேள் - ஆராயாமல் உறவுகொள்வோனே, கேட்பாய்; சாந்து அகத்து உண்டு என்று செப்புத் திறந்து ஒருவன் பாம்பு அகத்துக் கண்டது உடைத்து - அச்செயல், சந்தனம் உள்ளே இருக்கின்றதென்று கருதிச் சிமிழைத் திறந்து , ஒருவன், பாம்பை அதனுள் கண்டாற்போன்ற தன்மையுடையது.

(க-து.)எவரோடும் ஆராயாமல் நட்புக்கொள்வதற்கு அஞ்சுதல் வேண்டும்.

(வி-ம்.)இச் செய்யுள் மனத்தை விளித்துக் கூறியபடி; மன் : மிகுதிப்பொருட்டு. நிகழ்கால வினைகள் மனத்தின் விரைவு நோக்கி இறந்தகால வினைகளாக வந்தன. 2 உவமையிற் பாம்பென்றது பொருளில் தீக்குணங்களை. கருதி என ஒரு சொல் வருவிக்க.

(6)


1. குறள். 79 : 2
2. தொல். வினை. 44.