பக்கம் எண் :

118
 

தெரிந்து அவற்றைத் தெளிவுகொள்ள ஆராய்ந்து கற்பார்கள்.

(க-து.)தக்க மெய்ந்நூல்களையே தெரிந்து தெளிவாகக் கற்றல் வேண்டும்.

(வி-ம்.)மேலும்1இக் கருத்து வரும். கல்வியென்றது ஈண்டுக் கலை நூல்களும் பல தலையான சமய நூல்களுமாகும். பாலுண்குருகு, நீரை உண்ணுதலொடு அமைதியடையும் பல பறவைகள் போலன்றிப் பாலுண்ணுதலில் மகிழ்வு மிகுதியுமுடைய பறவையாகும்; அதனை அன்னப்புள் என்பது வழக்கு. அமைவென்றது, ஈண்டுத் தகுதி; அது மெய்யுணர்வை உணர்த்தும். தெரிந்து ஆராய்ந்து கற்ப என்க.

(5)

136. தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.

(பொ-ள்.)தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்று இகழார் அவன் துணையா ஆறுபோயற்று - படகு செலுத்துவோன் பழைமையான சாதிகளில், நினைக்குமிடத்துக் கடைப்பட்ட சாதியைச் சேர்ந்தவனென்று புறக்கணியாராய் அவன் துணையாக ஆற்றைக் கடந்துபோன தன்மையை ஒக்கும்; நூல்கற்ற மகன் துணையா நல்ல கொளல் - அறிவு நூல்கள் கற்ற பெருமகனொருவன் துணையாக மெய்ப்பொருள்களை அறிந்து கொள்ளுதல் என்க.

(க-து.)கல்விக்கு முன் பிறப்பின் உயர்வு தாழ்வு கருதத்தக்கன அல்ல.

(வி-ம்.)‘நல்ல கொளல் ஆறுபோ யற்று' என்க; தோணியியக்குந் தொழில் இந்நாட்டிற் பழைமையான


1. நாலடி. 14:10.