இறுக்க நினைவினாற், பகை முதலியன உண்டாதல் பொருளைக் காக்கும் அறிவு மடம் படுதல் முதலாயின உண்டாதலின் அவை பொருளை இழத்தற்குக் காரணங்களாகும். (10) 2. இளமை நிலையாமை
(இளமையின் நிலையில்லாமையை உணர்த்துதல் .) 11. நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார் ; - புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி இன்னாங் கெழுந்திருப் பார். (பொ-ள்.)நல் அறிவாளர் - பழுதற்ற அறிவினையுடையோர், நரை வரும் என்று எண்ணி - மூப்பு வருமென்று கருதி, குழவியிடத்தே துறந்தார் - இளமையிலேயே பற்றுள்ளத்தை விட்டார், புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே - குற்றம் நீங்குதலில்லாத நிலையில்லாத இளமைக் காலத்தை அறவழியிற் பயன்படுத்தாமல் நுகர்ந்து களித்தவர்களே, கோல் ஊன்றி இன்னாங்கு எழுந்திருப்பார் - மூப்பு வந்து கையிற் கோல் ஒன்று ஊன்றித் துன்பத்தோடு எழுந்து தள்ளாடுவார்கள். (க-து.)இளமைப் பருவத்தை அறவழியிற் பயன் படுத்தாமல் நுகர்ந்து மயங்கியவர்கள், பின்பு மூப்பினால் வருந்துவார்கள். (வி-ம்.)‘நரை' மூப்புப் பருவமும், ‘குழவி' இளமைப் பருவமும் உணர்த்துங் குறிப்பில் வந்தன. துறத்தல் - பற்றுள்ளம் விடுதல். ‘புரை தீரா' ‘மன்னா' இரண்டும் இளமைக்கு அடைமொழிகள். மகிழ்தல் - இங்கு நுகர்தல ; இளமையை அறஞ்செய்தற்குக் கருவியாகக் கொள்ளாமல் , அதனையே துய்க்கும் பொருளாகக்கொண்டு இன்புறுதல் பிழை என்றபடி. நல்லறிவாளர் துறந்தார் எனவே, இளமை மகிழ்ந்தார் புல்லறிவாளர் என்பது பெறப்
|