பக்கம் எண் :

120
 

என்றது, துறக்க வுலகை. பதி, அமராவதி யென்ப: கல்வியைப் போலத் துறக்கவுலகம் பேதமை கெடுத்து நிலையான அறிவொளியின்பம் நல்காதாகலின், இவ்வாறு நுவலப்பட்டது.

(7)

138. கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே1- நுனிநீக்கித்
தூரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர் தொடர்பு.

(பொ-ள்.)கனைகடல் தண்சேர்ப்ப - ஒலிக்கும் கடலின் குளிர்ந்த துறைவ!. கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்பு தின்றற்று - கற்று மெய்ப்பொருள் அறிந்தொழுகுவாரது நேயம் கரும்பை அதன் நுனியிலிருந்து தின்று சுவைப்பதைப் போன்றது; நுனி நீக்கித் தூரின் தின்றன்ன தகைத்து பண்பு இலா ஈரம் இலாளர் தொடர்பு - நுனியை விடுத்து அடிப்பகுதியிலிருந்து அதனைத் தின்றாற் போன்ற தன்மையையுடையது அக் கல்விப் பண்பும் அன்பும் இல்லாதவரது நேயம்.

(க-து.)கற்றோர் தொடர்பு வரவர வளர்ந்து இனிக்குந் தன்மையது.

(வி-ம்.) கல்வியறிவு ஈண்டுப் பண்பு எனப்பட்டது. அதனால் இயற்கையறிவு செம்மைப்படுதலின். கல்வி பெறாதோரது நிலையை நன்கு விளக்குவார் ‘பண்பு இலா ஈரம் இலாளர்' என்றார். கரும்பை நுனியிலிருந்து தின்னல் மேன்மேற் சுவைத்தற்கு உவமை; தூரென்றது "வேருந்தூருங் காயும்"2என்புழிப்போல ஈண்டுக் கரும்பின் அடிப்பகுதியை யுணர்த்தும்.

(8)

139. கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.


1. நாலடி 22:1.
2. பரிபாடல். 6 : 47.