பக்கம் எண் :

121
 

(பொ-ள்.)கல்லாரேயாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தாம் கல்லாதவரே யாயினும் கற்றாரைச் சேர்ந்து பழகினால் பண்பட்ட மெய்யறிவு வரவர உண்டாகப்பெறுவர்; தொல் சிறப்பின் ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புது ஒடு தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு - இயற்கைமணச் சிறப்பினையுடைய விளக்கமான நிறம் அமைந்த பாதிரிமலரைச் சேர்தலால் புதிய மட்பாண்டம் தன்கண் உள்ள தண்ணீர்க்குத் தான் அம்மணத்தைத் தந்தாற்போல வென்க.

(க-து.)கல்வி பயிலும் பேறில்லாதார் கற்றாரோடு சேர்ந்து பழகுதலாவது மேற்கொள்ள வேண்டும்.

(வி-ம்.)முறைமுறையே என்றற்கு ‘நாளும்' எனவும், இயற்கை மணச்சிறப்பென்றற்குத் ‘தொல்சிறப்' பெனவும் வந்தன. ஓடு : ஆகுபெயர்; புதிய மட்பாண்டத்தில் முதலில் பாதிரி மலர்களைப் பெய்துவைத்துப் பின்பு அதில் நீரூற்றி நீர்க்கு நறுமணங் கூட்டுதல் மரபாதலின், ‘பாண்டம் மணத்தை ஏற்றுப் பின் நீர்க்குத் தரும் என்றற்குத் தான் பயந்தாங்கு' எனப்பட்டது. ஈண்டுத் ‘தான்' என்பது பொருள் பயந்து நின்றது. உவமையணி.

(9)

140. அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)
உலகநூ லோதுவ தெல்லாங் - கலகல
கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்
போஒந் துணையறிவா ரில்.

(பொ-ள்.)அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஒதுவதெல்லாம் - அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல்களைக் கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரிய வாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக் கொண்டிருப்பது, கலகல கூம் துணையல்லால்- கலகல என்று இரையும் அவ்வளவேயல்லால், கொண்டு தடுமாற்றம் போம் துணை அறிவார் இல்-அவ் வுலக நூலறிவு கொண்டு பிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர் யாண்டும் இல்லை.