பக்கம் எண் :

122
 

(க-து.)கருவிக் கல்வி கொண்டு மெய்யுணர்வுக் கல்வி பெறுதலே, நோக்கமாதல் வேண்டும்.

(வி-ம்.)உலக நூலென்றது முன், "சத்தமும் சோதிடமும் என்றாங்கிவை"1எனப்பட்டவை. கலகலவென்பது இரட்டைக் கிளவி; பிரிந்திசையா2எல்லாம் என்றது, என்றும் அவற்றையே ஓதுங் குறிப்பின்மேற்று. கூவும் போவும் என்பன கூம்போம் என நின்றன.

(10)

15. குடிப்பிறப்பு

[குணத்தால் உயர்குவத்திற் பிறத்தலின் மேன்மை; ஈண்டுக் ‘குலம்’ என்றது சாதியன்று: ஒவ்வொரு சாதியிலும் உயர்ந்த குலங்கள் உண்டு. திருக்குறளுரையில் உரையாசிரியர் பரிமேலழகர் "உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதாகலின்" என3உரையெழுதிச் செல்லுதல் கருத்திற் பதிக்கற்பாலது.]

141. உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணுங்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புற் கறிக்குமோ மற்று.

(பொ-ள்.)இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா கொடிப் புல் கறிக்குமோ - பசித்துன்பம் மிகுந்து நின்ற போதும் சிங்கம் படர்புல்வைத் தின்னுமோ? அதுபோல்; உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும் குடிப்பிறப்பாளர் தம் கொள்கையின் குன்றார் - உடை பொலிவழிந்து உடல் மெலிவடைந்த காலத்திலும் உயர்குடிப் பிறந்தோர் தமக்குரிய ஒழுகலாற்றிற் குறைவுபடார்.

(க-து.)உயர்குடிப் பிறந்தோராயின், இயல்பாகவே நல்லொழுக்கத்தினின்றும் வழுவார்.


1.நாலடி. 6;
2.தொல். கிளவி. 18.
3. குறள், 96 ஆம் அதி. உரை.