நிறீஇயதும் இக் கருத்தின் கண்ணதென்க. பெருஞ் செல்வம் எய்தியக்கண்ணும் பிறர்க்குப் படா வெனவே, அஃதெய்தியக்கண் உயர்குடிப் பிறந்தார்க்கு இன்னும் அவ்வியல்புகள் சிறந்து தோன்றுமென்பது பெறப்பட்டது. (2) 143. இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோ டின்ன-குடிப்பிறந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ டொன்றா வுணரற்பாற் றன்று. (பொ-ள்.)இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோடு இன்ன - பெரியோரைக் கண்டால் தன் இருக்கையிலிருந்து எழுதலும், சற்று எதிர்சென்று வரவேற்றலும், அவர் பிரியும்போது சற்றுப் பின்சென்று அவர் விடைதர ஏனைப் பிரிந்து வருதலுமாகிய இத்தகைய பணிவுக் குணங்களை, சூடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கமாகக் கொண்டார், உயர்குடிப் பிறந்தார் கைவிடா நல்லொழுக்கமாக மேற்கொண்டொழுகுவர்; கயவரோடு ஒன்றா உணரற்பாற்றன்று-இத் தகுதி, கீழ்மக்களாற் சிறந்ததொன்றாக உணர்ந்துகொள்ளுதற்குரியதன்று. (க-து.)உயர்குடிப் பிறந்தாரே பணிவின் உயர்வை அறிந்துகொள்ளுந் தகுதியுடையர். (வி-ம்.)கயவரோடு என்னும் உருபு, "ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்"1என்புழிப்போல நின்றது. (3) 144. நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும்; - எல்லாம் உணருங் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ, புணரும் ஒருவர்க் கெனின்? (பொ-ள்.)நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும் - உயர்குடிப் பிறந்தார் நற்காரியங்கள் செய்தால் அஃதவர்க்கு இயல்பென்று.
1. தொல். வேற். 12- உரை.
|