பக்கம் எண் :

126
 

பிறந்தார் மரத்தார் - இவ்வாறு மாட்சிமையில்லா உயர் குடியிற் பிறந்தார், நடுக்கடலில் மரக்கலத்திற் செல்வாரை ஒத்தவராவர்

(க-து.)தீயவற்றிற்கு அஞ்சி வாழ்தற்குரிய உயர் குடிப் பிறப்பே சிறந்தது.

(வி-ம்.)எல்லாம் என்றது முழுமையும் என்னும் பொருட்டு. ஈதல் இல்லொழுக்கங்களுள் தலையானதாதலின், அதற்கு இயலாமை நேரின் அது முற்றும் அஞ்சுதற்குரிய1தென்பது கருத்து. மரக்கலம் என்னும் பெயர், கலம் என்னுஞ் சொல்லால் வழங்குமாப்போல் மரம் என்னும் பெயராலும் வழங்குவதாயிற்று. முற்செய்யுளைப் போல் இதுவும் பழித்ததுபோலப் புகழ்தலாதலின், ‘மாணாக்குடி' எனப்பட்டது.

(5)

146. இனநன்மை இன்சொல்ஒன் றீதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம் - கனமணி
முத்தோ டிமைக்கு முழங்குவரித் தண்சேர்ப்ப!
இற்பிறந்தார் கண்ணே யுள.

(பொ-ள்.)கனமணி முத்தோடு இமைக்கும் முழங்கு உவரித் தண் சேர்ப்ப-சிறப்புடைய மாணிக்க முதலிய மணிகள் முத்துக்களுடன் கிடந்து ஒளிர்கின்ற ஒலிக்குங்கடலின் குளிர்ச்சியான துறைவனே! இனநன்மை, இன்சொல், ஒன்று ஈதல், ஏனை மனநன்மை என்று இவையெல்லாம் இல்பிறந்தார் கண்ணே உள-நல்லார் கூட்டுறவு, இன்சொல்லுடைமை, வறியார்க்கு ஒன்று ஈதல், ஏனை மனத் தூய்மைஎன இந் நற்பண்புகளெல்லாம் உயர்குடிப் பிறந்தாரிடமே அமைந்திருக்கின்றன.

(க-து.)உயர்குடிப் பிறப்பு நற்பண்புகட்கு இடமானது.


1. குறுந். 137.