பக்கம் எண் :

127
 

(வி-ம்.)எல்லாவற்றிற்கும் அடிப்படையாகிய மன நன்மையை வேறு பிரித்தற்கு ‘ஏனை' யென்றார். மற்று ஏனை என்னும் இரண்டும் ஈண்டுப் பிறிதென்னும் ஒரு பொருட்கண் வந்தன. கடலுக்கு முத்துச் சிறப்பாதலின், வேறு பிரித்துக் கூறினார். இமைக்கும் சேர்ப்ப என்க. ஏகாரம்: பிரிநிலை.

(6)

147. செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை.

(பொ-ள்.)செய்கையழிந்து சிதல்மண்டிற்றாயினும் பொய்யா ஒரு சிறை பேர் இல் உடைத்தாகும் - வளமான பெரிய வீடு வளங்குறைந்த காலத்தில் கட்டுக்குலைந்து கறையான் கவ்விற்றாயினும் அது மழை ஒழுக்கில்லாத ஒரு பக்கத்தை உடையதாயிருக்கும், அதுபோல; எவ்வம் உழந்தக்கடைத்தும் குடிப்பிறந்தார் செய்வர் செயற்பாலவை-வறுமையினால் மிக்க துன்பத்திற் சிக்கி அலைப்புண்ட காலத்தும் உயர்குடியிற் பிறந்த நல்லோர் தாம் செய்தற்குரிய நற்செயல்களைச் செய்துகொண்டேயிருப்பர்.

(க-து.)வறுமையிலுங் குடிப்பிறந்தார் தம் கடமைகள் செய்தலில் வழுவார்.

(வி-ம்.)செய்கை - செய்த அமைப்பு; என்றது, கட்டுக்கோப்பு; செயற்பாலவை என்பன, "அறவோர்க் களித்தல் அந்தணரோம்பல்"1முதலிய கடமைகள்.

(7)

148. ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்
கொல்கார் குடிப்பிறந் தார்.


1. சிலப். 19 : 71-3.