(பொ-ள்.)ஒரு புடை பாம்பு கொளினும் ஒரு புடை அங்கண்மா ஞாலம் விளங்குறூஉம் திங்கள்போல் - ஒரு பக்கம் இராகுவென்னும் பாம்பு பற்றிக் கொண்டாலும் தனது மற்றொரு பக்கத்தால் அழகிய இடமகன்ற பெரிய உலகத்தை ஒளிவிளங்கச் செய்யுந் திங்களைப்போல, செல்லாமை செவ்வன் நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார் குடிப்பிறந்தார் - வறுமையினால் மாட்டாமைநிலை நன்றாக முன்நிற்பினும் உயர்குடிப் பிறந்தார் பிறர்க்கு உதவி செய்யும் வகைக்குத் தளரமாட்டார். (க-து.)பிறர்க்கு உதவும் வகையில் வறுமையிலும் - குடிப்பிறந்தார் தளரார். (வி-ம்.). "இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்"1என்றார் திருவள்ளுவரும். பாம்பு கொளல் என்பது, திங்களைக் கோள்பிடித்து அதனொரு பகுதியை மறைத்தல். வறுமையுடையார் சொல்லுஞ் செயலும் உலகில் செல்லாமை நினைந்து, அவ் வறுமை நிலையை ஆசிரியர் ‘செல்லாமை' யென்றே விதந்தார். (8) 149, செல்லா விடத்துங் குடிப்பிறந்தார் செய்வன செல்லிடத்துஞ் செய்யார் சிறியவர்; - புல்வாய் பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல் பொருமுரண் ஆற்றுதல் இன்று. (பொ-ள்.)செல்லாவிடத்தும் குடிப்பிறந்தார் செய்வன செல்லிடத்தும் செய்யார் சிறியவர் - வறுமையினால் மாட்டா நிலையிலும் உயர்குடிப்பிறந்தார் செய்யுங்கடமைகளைச் செல்வாக்கு நிலையிலுங் கீழ்குடிப் பிறந்தார் செய்யமாட்டார்; புல்வாய் பருமம் பொறுப்பினும் பாய் பரிமாபோல் பொரும் முரண் ஆற்றுதல் இன்று-மான். சேணந் தாங்கினாலும் பாயும் இயல்பினையுடைய குதிரையைப்போல் மாறுபட்டுப் போர் செய்யும் செருக்கினைச் செய்தல் இல்லை.
1. குறள், 22:8.
|