பக்கம் எண் :

129
 

(க-து.)வறுமையிலும் குடிப்பிறந்தார் தங் கடமைகளைச் செய்யும் ஆற்றலுடையராவர்.

(வி-ம்.)பருமம், சேணம் என்னும் பொருட்டு; "பருமம் களையாப் பாய்பரிக் கலிமா"1என்னும் நெடுநல்வாடையினும் இப்பொருள் காண்க. பொருதற்குரிய சேணந் தாங்கினும் பொருகின்ற முரணுள்ளம் மானுக்கு இல்லாமைபோல, உதவுதற்குரிய செல்வம் பெறினும் உதவுகின்ற வண்மையுள்ளம் கிழோர்க்கில்லையெனக் கொள்க. மேல், ‘கயமை' என்னும் அதிகாரத்தில் வரும் ‘ஏட்டைப் பருவத்தும்'2என்னுஞ் செய்யுளுங் கருதற்பாலது. எடுத்துக்காட்டுவமை.

(9)

150. எற்றொன்றும் இல்லா இடத்துங் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றாவர்;
அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும்.

(பொ-ள்.)எற்று ஒன்றும் இல்லாவிடத்தும் குடிப்பிறந்தார் அற்றுத் தன் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர் - கையில் எத்தகையதொரு பொருளும் இல்லாத காலத்தும் உயர்குடிப் பிறந்தார் ஆதரவற்றுத் தம்மையடைந்தவர்க்கு அவரது தளர்ச்சிக் காலத்தில் ஊன்றுகோல் போல் உதவுவர்; அற்றக் கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக் கால் தெற்றெனத் தெள்நீர் படும் - நீரற்ற காலத்தும், அகன்ற ஆறு சற்றுக் குழிதோண்டியகாலத்தில் விரைவாகத் தெளிநீர் ஊறி உதவும்.

(க-து.)குடிப்பிறந்தார் எந்நிலையிலும் தம்மை அண்டியவரின் தளர்ச்சிக் காலத்தில் ஊன்றுகோல் போல் உதவுவர்.

(வி-ம்.)எற்றொன்று மென்றார், சிறிதுமென்றற்கு ஊன்றுகோல் ஊன்றெனநின்று பின் ஊற்று என வலித்தது. "உடம் புயிர்க்கு ஊற்றாக"3என்றார் பிறரும். மேல், பெருமை'4யென்னும் அதிகாரத்தில் வரும் ‘உறைப்பருங்காலத்தும்' என்னுஞ் செய்யுளையுங் கருதுக.

(10)


1. நெடுநல். 179.
2.நாலடி. 36 : 8.
3. கலி. நெய். 29.
4. நாலடி. 19 : 4.