பக்கம் எண் :

130
 

16. மேன்மக்கள்

[மேன்மக்களின் இயல்புகள் இன்னவென்பது; மேன்மக்களாவார், குணத்தான் மேம்பட்ட நன்மக்கள்.]

151. அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.

(பொ-ள்.)அங்கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர் மன் - அழகிய இடமகன்ற வானத்தில் விரிந்த நிலவொளியைப் பரவச் செய்யும் திங்களும் மேன்மக்களும் தம்மிற் பெரும்பாலும் ஒத்த பெருமையுடையவராவர்; திங்கள் மறு ஆற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்து தேய்வர் ஒரு மாசு உறின்-ஆனால்; திங்கள் களங்கத்தைத் தாங்கும்; மேன்மக்கள் தமதொழுக்கத்திற் சிறிது கறையுண்டானால் அது பொறாராய் உள்ளங் குழம்பி அழிவர்.

(க-து.)திங்களைப்போற் சான்றோர் மறுவாற்றாராதலின், அவர் அதனினுஞ் சிறந்தவராவர்.

(வி-ம்.)ஒப்பரென்னும் முடிபு திணைவழுவமைதி; "மூத்தோர் குழவி எனுமிவரை"1என்புழிப்போல. ஒப்புஇருள் நீங்கித் தண்ணொளி வழங்குதலிற் கொள்க. மன்: மிகுதிக்கண் வந்து ஈண்டுப் பெரும்பாலுமென்னும் பொருட்டாயிற்று; ஆதலால், அதனாற் பெறப்படுகின்ற சிறுபான்மை வேறுபாடு, பின் இரண்டடிகளில் விளக்கப்பட்டது. ஆற்றார்:முற்றெச்சம். வேற்றுமையணி.

(1)

152. இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர்; - விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ,
அரிமாப் பிழைப்பெய்த கோல்?


1. சிலப். 21 : 54.