பக்கம் எண் :

133
 

டாம்' என்றார். தூய உணர்ச்சிச் சிறப்பே நட்புக்கு ஏதுவென்பது இச்செய்யுட் கருத்து; "உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும்"1என்றதுங் காண்க.

(4)

155. புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவுங் கண்ணோடி
நல்லார் வருந்தியுங் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து.

(பொ-ள்.)புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி கல்லா ஒருவன் உரைப்பவும் - பொருந்தாக் கல்வியையுடைய மெய்யுணர்வில்லாத வீணோரவையில் கல்வியறிவு நிரம்பப்பெறாத ஒருவன் உரையாடவும், கண்ணோடி நல்லார் வருந்தியும் கேட்பர் அவன் பல்லாருள் நாணல் பரிந்து -மேன்மக்கள் கண்ணோட்டமுற்று, உள்ளம் வருந்தியுங் கேட்டுக்கொண்டிருப்பர், தாம் கேளாதொழியின் அவன் பலரிடையில் நாணங்கொள்ள நேர்தற்கு இரங்கியென்க.

(க-து.)மேன்மக்கள் கல்வியறிவும் மெய்யுணர்வும் வாய்ந்து அவையில் அடக்கமுங் கண்ணோட்டமு முடையராயிருப்பர்.

(வி-ம்.)எழுத்து, ஈண்டுக் கல்வியென்னும் பொருட்டு; "மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி"2 என்பதும் ஈண்டு நினைவுகூர்தற்குரியது. ‘பொருள்' என்றது மெய்ம்மை; "பொய்யுரையே யன்று பொருளுரையே"3 என்றார் பிறரும்; இங்கு மெய்யுணர்வு என்னும் பொருட்டு. ‘வறுங்கோட்டி' என்னுமிடத்து வறுமை பயனின்மை: "வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்"4 என்புழிப் போல, உம்மை இரண்டனுள் முன்னது எச்சமெனவும் பின்னது இழிவுசிறப்பெனவுங் கொள்க.மற்று:அசை.

(5)


1. குறள். 79 : 5
2. தொல். சிறப்புப்பா. 12.
3. சிலப். 9 : 18.
4. சிலப். 30 : 198.