156. கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்; வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார் கூறார்தம் வாயிற் சிதைந்து. (பொ-ள்.)கடித்துக் கரும்பினைக் கண் தகர நூறி இடித்து நீர் கொள்ளினும் இன்சுவைத்தேயாகும் - கரும்பினைப் பல்லினாற் கடித்தும், கணுக்கள் உடையும்படி ஆலையிலிட்டுச் சிதைத்தும், பிற கருவிகளால் இடித்தும் அதன் சாற்றைக் கொண்டாலும், அச் சாறு இனிய சுவையுடையதேயாகும்; வடுப்பட வைது இறந்தக்கண்ணும் குடிப்பிறந்தார் கூறார் தம் வாயின் சிதைந்து - பழியுண்டாகும்படி தம்மைப் பிறர் பழித்து வரம்பு கடந்தபோதும்1மேன்மக்கள் தமது பெருந்தன்மையிற் குறைந்து வாயினால் தீயன கூறார். (ஆண்டும், இனியரேயாவர் என்றபடி.) (க-து.)பிறரால் இடுக்கணுற்ற விடத்தும் சான்றோர் இனியராகவே ஒழுகுவர். (வி-ம்.)கடித்தும் நூறியும் இடித்தும் என்று கொள்க. தம் வாயின் சிதைந்து, தமது உண்மை நிலையினின்றும் மாறி எனினுமாம், ஆவது, தம் பெருந்தன்மையினின்றுங் குறைந்து என்க. எடுத்துக்காட்டுவமை, (6) 157. கள்ளார், கள் ளுண்ணார், கடிவ கடிந்தொரீஇ, எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார், - தள்ளியும் வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார் சாயிற் பரிவ திலர். (பொ-ள்.)வடு அறு காட்சியார் - மாசு நீங்கிய தெளிவினையுடையார், கள்ளார் - பிறர் பொருளைக்கவரார்; கள் உண்ணார் - கள் அருந்தார்; கடிவ கடிந்து ஒரீஇ- விலக்கத் தகுந்த தீயவற்றை விலக்கி அவற்றின் நீங்கித் தூயராகி, எள்ளிப் பிறரை இகழ்ந்து உரையார் - பிறரை அவமதித்து இகழ்ந்து உரையாடாமல் விளங்குவர்;
1. நாலடி. 7 : 1.
|